வலிப்பு நோய் என்ற நரம்பியல் பிரச்சினை
வலிப்பு நோய்
வலிப்பு நோய் என்ற நரம்பியல் பிரச்சினை பற்றி நமக்கு பல சந்தேகங்கள் மற்றும் பயங்கள் இருக்கும். முதலில் நாம் அது பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
வலிப்பு என்பது நம்முடைய கட்டுப்பாடு இல்லாமல் உடலின் பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக அல்லது அசாதாரணமாக இயங்குவது . இவ்வாறு உடல் இயங்குவதை தான் வலிப்பு என்கிறோம். கை கால்கள் வெட்டியிழுத்து வாயில நுரை வந்தால் தான் வலிப்பு என பலரும் நினைக்கின்றனர். அது அப்படியில்லை. வலிப்பு பல வகைப்படும். கணநேரம் ஒருவர் நினைவில்லாமல் இருக்கலாம், கை கால்கள் வெட்டி இழுக்கலாம் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் நாம் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கலாம்/அசையலாம். இதுபோல பல அறிகுறிகள் வரலாம்.
வலிப்பு என்பது மூளையில் ஏற்படக்கூடிய voltage fluctuation அதாவது மின் அதிர்வு மாற்றம். மூளையின் ஒவ்வொரு செல்களுக்கிடையே அந்த Electrical Discharge or Electrical Transmissionல் ஏற்படக்கூடிய ஏற்ற தாழ்வுகள் தான் வலிப்பு நோயாக உருவெடுக்கிறது.
மருத்துவரை சந்திக்கும்போது பலரும் சொல்லக்கூடிய விசயம், எங்க பரம்பரையிலேயே யாருக்கும் வலிப்பு நோய் வந்ததில்லை என்பதுதான். இந்த நோய் யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம், பிறந்த குழந்தைகளும் வரலாம்,வயதானவர்களுக்கும் வரலாம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கூட வரலாம். யாருக்கு வரும் என நம்மால் அநுமானிக்க இயலாது.
வலிப்பு நோய் பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, வலிப்பு என்ன காரணத்தினால் வருகிறது என்பதைத்தான்.
எடுத்துக்காட்டாக :
1.மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்,
2.மூளையில் ஏற்படக்கூடிய கட்டி,
3.மூளையில் ஏற்படக்கூடிய கிருமித்தாக்கம்.
4.மூளையில் ஏற்படும் காயம்( தலையில் அடிபடுவதால் ஏற்படுவது).
மேற்கண்ட காரணங்களினால் வலிப்பு நோய் வரலாம்.
மற்றொரு வகை என்னவென்றால், செல்களுக்கிடையே ஏற்படும் மின் அதிர்வுகளில் மாற்றம் ஏற்பட்டாலும் வலிப்பு வரலாம்.
வலிப்பு வந்தால் நாம்செய்யவேண்டியது :
முதலில் ஒரு நரம்பியல் மருத்துவரை அணுகி, அந்த நோய் எதனால் வருகிறது என்பதை கண்டறியவேண்டும். அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
பரிசோதனைகள்:
1. Scan
2. EEG
EEG (Electroencephalogram)
இதயத்திற்கு எப்படி ECG எடுக்கிறோமோ அதுபோல மூளையின் செயல்பாட்டை கண்டறிவது தான் இந்த பரிசோதனை முறையும். இந்த பரிசோதனையில் மூளையில் ஏற்படும் மின் அதிர்வு மாற்றத்தை கண்டறிய முடியும்.மேலும் மூளையின் எந்த பகுதியில் இந்த பாதிப்பு உருவாகின்றது என்பதையும் இந்த பரிசோதனையின் மூலமாக தெளிவாக கண்டறிய முடியும்.
நோயை கண்டறிந்தபின் கடைபிடிக்க வேண்டியவை:
1.நரம்பியல் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான நேரத்தில், தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் மருந்துகளை உடன் எடூத்துச்செல்ல வேண்டும். பலரும் இதை கடைபிடிப்பதில்லை. அவசரமா கிளம்பியதால் மறந்துவிட்டதாக காரணம் சொல்வார்கள். இதனை தவிர்க்க வேண்டும். நாம் செல்லும் இடங்களுக்கு நமக்கு தேவையான மருந்துகளையும், மருந்து சீட்டையும் உடன் வைத்திருப்பது அவசியம். மேலும் பாதிக்கப்பட்டவர் தனக்குள்ள நோய் மற்றும் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றிய விபரங்களை ஒரு அட்டையில் குறித்து அதை பாக்கெட்டிலோ, மணி பர்ஸிலோ வைத்துக்கொள்வது நல்லது.
2. நல்ல உறக்கம் அவசியம். இரவு நேரங்களில் நீண்டநேரம் விழித்திருக்காமல் சரியான நேரத்தில் உறங்க வேண்டும்.
3. அதிக நேரம் கம்யூட்டர், மொபைல்போன், டீவி போன்ற மின்திரைகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
4. வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
5. உயரமான இடங்களுக்கு செல்வதையோ, நீருக்குள் மூழ்கி செய்யும் வேலைகளையோ, நீச்சலடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த மருந்துகளை தவறாமல் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் இந்த வலிப்பு நோயின் பாதிப்பு குறைந்துவிடும். குறைந்பட்சம் இரண்டு வருடங்கள் மருந்துகளை உட்கொள்ள வேண்டிவரும். பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மற்றும் நோயின் தன்மையை பொறுத்து இந்த கால அளவு மாறுபடும்.
தொடர்ந்து சரியாக மருந்துகளை உட்கொண்டுவந்தால், அவை மூளையில் ஏற்படும் மின் பரிமாற்ற ஏற்ற தாழ்வுகளை சரி செய்து இயல்பான நிலையில் மூளையின் செல்களை செயல்பட வைக்கும்.
வேறு ஏதாவது காரணங்களினால் வலிப்பு நோய் வந்திருக்குமெனில் மூளை நரம்பியல் மருத்துவரையோ, மூளை அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணரையோ அணுகி அவர்களின் ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொண்டு இந்த வலிப்பு நோயை சரி செய்ய இயலும்.
வலிப்பு நோய் வந்ததால் வாழ்கையில் பெரிய பாதிப்பு அடைந்துவிட்டோம் என அச்சப்பட வேண்டாம். இது சரி செய்யக்கூடிய நோய் என்பதால், இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனக்குழப்பம் அடைய வேண்டாம். உரிய நரம்பியல் மருந்துவரை அணுகி முறையாக சிகிச்சையை மேற்கொண்டால் இந்த வலிப்பு நோயை எளிதாக கையாள முடியும்.